ஷிவானி செந்தில் இயக்கத்தில் சுபா செந்தில் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'டேக் டைவர்ஷன்’. இதில் கே.ஜி.எஃப். படப்புகழ் சிவக்குமார் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "இப்படத்தின் கதாநாயகன் சிவக்குமார், தமிழ் சினிமாவின் என்றும் மார்க்கண்டேயனான சிவகுமாரைப் போல் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறேன். நாயகன் சிவக்குமார் பேசும்போது, 'என்னுடைய தாயார் என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்க மாட்டார்' எனக் குறிப்பிட்டார். இந்த உலகத்தில் எதையும் எதிர்பார்க்காத ஒரு ஜீவன் என்றால் அது தாய்தான். அவர்களின் எதிர்பார்ப்பு, 'தன் பிள்ளை நன்றாக பெயரெடுக்க வேண்டும். தன் பிள்ளை வெற்றி பெற வேண்டும். நன்றாக சம்பாதிக்க வேண்டும்' என்பதுதான். இப்படத்தின் நாயகன் சிவகுமார் மேடையில் பேசும்போது தன்னுடைய குருவிற்கு நன்றி தெரிவித்த பிறகுதான் தாய்க்கு நன்றி தெரிவித்தார். அப்போதே அவர் கலைஞராகிவிட்டார். ஒரு கலைஞனுக்கு முதலில் குருதான் அனைத்தும். அதன்பிறகுதான் மற்றவர்கள்.
அண்மைக்காலமாக தமிழைக் காப்பாற்ற வேண்டும், இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பு என குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் தமிழ் அழியாது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறேன். முன்பெல்லாம் விழாக்களில் கலந்து கொள்ளும் கதாநாயகிகள், ஆங்கிலத்தில் இரண்டு வார்த்தைப் பேசிவிட்டு அமர்ந்து விடுவார்கள். அண்மைக்காலமாக நான் கலந்து கொள்ளும் விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் கதாநாயகி பெயர் பாடினி. அருமையான இலக்கியத் தமிழ் பெயர். அவர்கள் தமிழில் பேசுவதே அழகு. அழகான பெண் தமிழில் பேசினால் அதைவிட அழகு. அதனால் இனிமேல் அழகான பெண்கள் தமிழில் பேசி, தமிழைக் காப்பாற்ற வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை எல்லாருக்கும் டேக் டைவர்ஷன் தான். ஒரு கிலோ மீட்டருக்கு செல்லவேண்டிய தூரத்திற்கு, ஆறு கிலோமீட்டர் வரை டேக் டைவர்ஷன் எடுத்துச் செல்வோம். தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், 'டேக் டைவர்ஷன்' என்பது இயல்பான, பழகிப்போன, ஒரு பொருத்தமான தலைப்பு.
இன்றைய தேதியில் ஒரு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்றால், அதில் பெரிய ஹீரோ நடித்திருக்க வேண்டும் அல்லது கதை ஹீரோவாக இருக்க வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருகை தருகிறார்கள். அந்தவகையில் டேக் டைவர்ஷனில் கதை தான் ஹீரோ.
இயக்குநர் ஷிவானி செந்தில் ஏற்கெனவே 'கார்கில்' என்ற ஒரே ஒரு நடிகர் நடித்த திரைப்படத்தை இயக்கியவர். அந்தப் படத்திலும் ஒரு புது முயற்சியை மேற்கொண்டவர். தமிழ்த் திரையுலகில் புதிய முயற்சிக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' படத்திற்கு ஆதரவு கிடைத்தது போல், அவரது 'இரவின் நிழல்' என்ற புதிய முயற்சிக்கும் ஆதரவு கிடைக்கும். அந்தப் படத்தை பார்த்துவிட்டேன். பார்த்திபனின் புதிய முயற்சிக்குப் பாராட்டுகள். அவர் ஒரு தமிழ் இயக்குநர் என்பதால் நானும் பெருமிதம் அடைகிறேன்.
டேக் டைவர்ஷன் பலருக்கு நல்ல வழியைக் காட்டிவிடும். இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகராக வெற்றி பெறுவதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் அவர் டேக் டைவர்ஷன் எடுத்து இயக்குநராகி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். ஒரு கிராமவாசி திரை உலகில் நுழைந்து வெற்றிகரமான இயக்குநராக முடியும் என்பதை அவர் நிரூபித்தார். இதனால் நூற்றுக்கணக்கான கிராமத்துவாசிகள் இயக்குநர் கனவோடு தமிழ் திரையுலகில் படையெடுத்து வருகிறார்கள். அவர் வெற்றி அடைய வில்லை என்றால், இன்று பேரரசு உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் திரையுலகில் அறிமுகமாகி இருக்க மாட்டார்கள். அதனால் பல தருணங்களில் டேக் டைவர்ஷன் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஷிவானி செந்தில் இயக்கியிருக்கும் டேக் டைவர்ஷன் அவருக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, ஏற்றத்தை அளிக்க வேண்டும்.
திரையுலகை பொறுத்தவரை புதிய முயற்சிகள்தான் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்று வரலாறாகும். என்னைப் பொறுத்தவரை பெரிய நடிகர்களை வைத்து வெற்றிப்படத்தை அளிக்கும் இயக்குநர்களை விட, புதுமுகங்களை வைத்து பெரிய வெற்றியை வழங்குபவர்கள் தான் சிறந்த இயக்குநர்கள். அதுபோன்றதொரு வெற்றியை இயக்குநர் ஷிவானி செந்தில் பெறுவார்" எனத் தெரிவித்தார்.