இந்திய சினிமாவில் மிகப்பெரும் சினிமா ஆளுமையாக பார்க்கப்படுபவர் அனுராக் காஷ்யப். அதற்கு, உலகளவில் போற்றப்படும் அவருடைய படைப்புகளே சான்று.
அண்மையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாயல் கோஷ் என்ற நடிகை பாலியல் புகார் வைத்தார். நடிகையின் புகார் குறித்து மும்பை போலீஸார், அனுராக் காஷ்யப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகை பாயல் கோஷ், இந்திய குடியரசு கட்சியில் இணைந்துள்ளார். அண்மையில் மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகை பாயல் கோஷ், ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார். கட்சியில் அவருக்கு மகளிர் அணி துணை தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே அனுராக் காஷ்யப் - பாயல் கோஷ் விவகாரத்தில் பாயல் கோஷுக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்சி பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிடுகையில், “என் அப்பாவுடைய கொள்ளுத்தாத்தா புரட்சிகரமான ஒரு பத்திரிகையாளர். அவருக்குக் கொல்கத்தாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனது மாமா ஒருவர் கொல்கத்தாவின் மேயராக இருந்துள்ளார். எனக்கும் சமூகத்துக்குச் சேவை புரிவது மிகவும் பிடித்தமான ஒன்று.
தங்கள் கடைசி மூச்சு வரை நாட்டுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களான பினாய் போஸ் மற்றும் பாதல் குப்தா இருவரும் என் உறவினர்கள். அவர்களுடைய ரத்தம் என் உடலிலும் ஓடுகிறது. எனவே, யாருடைய நற்பெயரையும் நான் கெடுக்க மாட்டேன். ஆனால், எனக்கு தீங்கிழைப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன்” என்றார்.