
ஆந்திர துணை முதல்வரும் ஜன சேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண், தனது இளைய மகனான மார்க் ஷங்கரை சிங்கப்பூரில் படிக்க வைத்து வருகிறார். இந்த நிலையில் சிங்கப்பூரில் அவர் மகன் படிக்கும் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மகனின் கைகள் மற்றும் கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் தீ விபத்து புகையை சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மகன் மார்க் ஷங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மார்க் ஷங்கருக்கு 8 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அறிந்த பவன் கல்யாண் தனது அரசியல் நிகழ்வுகளை உடனடியாக ரத்து செய்துவிட்டு சிங்கப்பூர் செல்லவுள்ளார். அவர் மக்கள் வளர்ச்சித் திட்டங்களின் பணிகளுக்காக நேற்று முதல் ஏ.எஸ்ஆர் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த சுற்றுப்பயணம் நாளை வரை திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டு விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூர் புறப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் மகனை பார்த்துவிட்டு திரும்பி வந்து மீண்டும் மக்கள் வளர்ச்சி பணிகளை தொடரவுள்ளதாக அவரது கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.