
லைகா நிறுவனம் தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படம் 'பட்டத்து அரசன்'. இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத், ராதிகா சரத்குமார், துரை சுதாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த துரை சுதாகர் இப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
துரை சுதாகர் பேசுகையில், "நான் களவாணி 2 படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு அழுத்தமான அறிமுகமும் அங்கீகாரமும் கிடைத்தது. என்னை களவாணி துரை சுதாகர் என்றே பலரும் அழைக்கிறார்கள். அதற்காக இயக்குநர் அண்ணன் ஏ.சற்குணம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பட்டத்து அரசன் படத்தில் நான் ராஜ்கிரணின் பையனாக நடித்திருப்பேன். அவர், நான் நடித்தபோது என்னைப் பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
அதே போல் நடிகர்கள் அதர்வா, ஜெய பிரகாஷ், சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட அனைவரும் நன்றாக பழகினர். இதற்கு முன்பு களவாணி படத்தில் நடித்தபோது நான் வருகிற காட்சியில் மக்கள் கூட்டம் நிறைய இருக்கும். ஆயிரம் பேர் மத்தியில் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது அது ஒரு சவாலாக இருந்தது. இப்போது பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் மத்தியில் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது" என்றார்.