
ப.பாண்டி, ராயன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. இப்படத்தை தனுஷ் இயக்குவதோடு மட்டும் இல்லாமல் அவரது உண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்தும் உள்ளார். இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாராயண், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் முதல் பாடலாக வெளியான ‘கோல்டன் ஸ்பாரோ...’ நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெளியான ‘காதல் ஃபெயில்’, ‘ஏடி’ மற்றும் ‘புள்ள’ பாடல்கள் ஓரளவு வரவேற்பை பெற்றன. படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. நாளை(21.02.2025) இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்துக்கு சிறப்பு காட்சி வழங்கி தமிழக அரசு அனுமதித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ், படம் வெளியாகும் முதல் நாள் 21.02.2025 மற்றும் அடுத்து இரண்டு நாளான 22.02.2025, 23.02.2025 ஆகிய தேதிகளில் காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது. இதை பரிசீலினை செய்த தமிழக அரசு அதிகாரிகள் நாளை(21.02.2025) மட்டும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் வீதம் கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க அறிவுறுத்தியுள்ளது.