இந்திய அரசின் 68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த முறை தமிழ் சினிமாவிற்கு மொத்தம் 10 விருதுள் கிடைத்துள்ள நிலையில், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு விருது வென்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், “இரவின் நிழல் மாதிரியான படம் எடுப்பதற்குப் பின்னால் நிறைய பிரச்சனைகள் உள்ளன. எனக்கு சொந்த வீடு, வாசலெல்லாம் கிடையாது. என்னுடைய மகளின் திருமணத்தின்போது மாப்பிள்ளையை வீட்டிற்கு வரவைத்து பொண்ணை காட்டுவதற்குப் பதிலாக நாங்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் சென்றோம். ஏனென்றால் நாங்கள் இருந்தது வாடகை வீடு. சினிமாவைத் தவிர எனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறும்போது எமோஷனாலான பார்த்திபன் கண் கலங்கினார். இதையடுத்து, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆறுதல் கூறி அவரைத் தேற்றினார். அதனைத் தொடர்ந்து பேசிய பார்த்திபன், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.