டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விழாவில் 2019 ஆம் ஆண்டு சினிமா துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த படமாக அசுரனுக்கும், இதில் நடித்ததற்காக தனுஷுக்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகச் சிறந்த துணை நடிகர் விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
ஒத்த செருப்பு படத்துக்கு ஸ்பெஷல் ஜூரி விருது நடிகரும் இயக்குநருமான பார்த்திபனுக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலுக்காக டி.இமான் மற்றும் கேடி என்ற கருப்பு துரை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நாகா விஷாலுக்கும் விருது வழங்கப்பட்டது . இதனைத் தொடர்ந்து சினிமாப் பிரபலங்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்," எனது வெற்றி படங்களை விட வர்த்தக ரீதியான தோல்வி படங்களே அதிகம். ஆனால் அதிலும் ஒரு சிறிய அளவிலான புதிய முயற்சியை செய்திருக்கிறேன். ஒத்தையடி பாதையில் இருந்து ஒத்த செருப்பு வரை உள்ள பயணத்தில் பத்திரிகையாளர்களின் பங்கு அதிகம். இப்போதுதான் என் பயணத்தை வெற்றியை நோக்கித் தொடங்கியிருக்கிறேன். ஒத்த செருப்பின் வெற்றியைத் தொடர்ந்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி இருக்கிறேன். இப்படத்தை ஏ.ஆர் ரகுமான் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார்' என்றார்.
மேலும் ஒத்த செருப்பு படத்தை இந்தியில் அமிதாப்பச்சன் தயாரிப்பில், அபிஷேக் பச்சனை வைத்து இயக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.