'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு 8.15 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்திற்குள்ளான விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இந்த விமானத்தில் 10 குழந்தைகள் உட்பட சுமார் 180 பயணிகளும், விமான ஊழியர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளனர். இதுவரை ஒரு குழந்தை உள்பட 18 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பார்த்திபன் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்...
''கேரள கோழிக்கோடு விமான விபத்து
விமானத்தைப் போன்றே நம் இதயமும் இரண்டாக பிளந்தது. உயிர் நீத்தவர்களின் உறவினர்களுக்கும்,
காயமடைந்தவர்களுக்கும் ஆறுதலைத் தவிர வேறென்ன சொல்லி நம்மை சமாதானப் படுத்திக்கொள்ள முடியும்? விபத்துகள்... போதிய கவனத்தால் தவிர்க்க படவேண்டும்!!!'' என கூறியுள்ளார்.