ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், ட்ரைல்ர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.
அவர் பேசுகையில், “இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில் இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில் இந்தக் கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். ஜிவியை எனக்கு தங்கலான் மூலமாகத்தான் பழக்கம். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகிய பிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனம் கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.
இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துகள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு பலம் இருக்கிறது. அதன் மூலம் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் கஷ்டப்படுகிற சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உதவுகிறார் சக்தி பிலிம் சக்திவேலன். அவர் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது ஜெ. பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என கேட்டால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. படம் பார்த்தவர்களுக்கு எல்லாருக்குமே பிடித்திருந்தது. நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதை பார்க்கும்போது வணிக ரீதியாக வெற்றியை விட ஒரு படம் முக்கியமானதாக பார்க்கப்படும் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கும். இது போலத்தான் அட்டகத்தி எனக்கு ஆரம்பித்தது.
ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கென்று சில வேலைகள் இருந்தது, அதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் வந்தேன். அதன் பிறகு தயாரிப்பு பொறுப்பு வந்தவுடன் ரசித்து தான் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் சரி, கதாபாத்திரங்களிலும் சரி, அனைத்திலும் என்னுடைய தலையீடுகள் இருக்கும். ஆனால் அது இயக்குநருக்கு பாதிப்பு ஏற்படாமல் தேவையான விஷயத்தை ஆதரிக்கிற வகையில் இருக்கும். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக் கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். நிச்சயமா இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கும் என நினைக்கிறேன். அந்த விவாதம் சரியான இடத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.