எழுத்தாளரும் இயக்குனருமான கீரா இயக்கியுள்ள 'பற' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ட்ரெயிலரும் திரையிடப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் பேசியது...
"அண்ணன் கீரா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கான விழாவில் இவ்வளவு பேர் கூடியிருப்பது அவரை இன்னும் தயக்கமின்றி படைப்பு வேலைகளில் ஈடுபட வைக்கும். படத்தின் ட்ரெயிலரில் 'பிசிஆர் சட்டம் இப்போதும் தேவையா?' என்ற பொதுபுத்தியின் கேள்வியை பிரதிபலித்திருக்கிறார். அதுபோல மிக மோசமான முறையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கண்ணகி-முருகேசன் குறித்தும் வசனம் இருக்கிறது. அந்தக் கொலையை கதையாகக் கேட்டாலே நம்மை கண் கலங்கவைக்கும். அதை படத்தில் வைத்தது நல்ல விஷயம். இத்தகைய விஷயங்களை திரைப்படங்களில் பேசக்கூடிய சூழல் இப்போது உருவாகியுள்ளது நல்லது. அதைத்தாண்டி, வசனங்களாக மட்டுமல்லாமல் மக்கள் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடியதாக மாறும்போதுதான் ஒரு கலைஞனுக்கு உண்மையான வெற்றி.
கீரா தனது ஆதர்ச நாயகனான தமிழரசன் பற்றியும் படத்தில் பேசுகிறார். சமுத்திரக்கனி பாத்திரத்துக்கு 'அம்பேத்' என்று புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்திருக்கிறார். நான் என் படங்களில் சாதி குறித்து பேசியதால் ஏற்பட்ட விவாதங்கள், 'பரியேறும் பெருமாள்' போன்ற ஒரு கதையை எழுத மாரி செல்வராஜை ஊக்கப்படுத்தின. ஆனாலும் அதைத் தயாரிக்க பலர் தயங்கினர். இது போன்ற கதைகள் சர்ச்சைகளை கிளப்பும், மக்களுக்குப் பிடிக்காது, வெற்றி பெறாது என்றெல்லாம் முன்முடிவுகள் வைத்திருந்தனர். இன்று அந்தப் படங்களின் வெற்றி சமீபகாலமாக பல வணிகத் திரைப்படங்களிலும் கூட சாதி வேறுபாடுகள் குறித்து பேச வைத்திருக்கிறது."