தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பா.ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கர்நாடகாவின் கோலார் பகுதியில் மாறி மாறி நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ரஞ்சித், தங்கலான் படம் மற்றும் அடுத்த படம் குறித்த அப்டேட்டுகள் பற்றி பேசியுள்ளார். அவர் பேசுகையில், "தங்கலான் படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கே.ஜி.எஃப்பில் ஒரு பெரிய போர்ஷனை எடுத்து முடித்துள்ளோம். மொத்தம் 55 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடந்தது. இன்னும் 25 நாள் படப்பிடிப்பு இருக்கிறது. மே மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அங்கு படப்பிடிப்பு நடத்த ரொம்ப சவாலாக இருந்தது. அந்த சவாலை ஏற்று இரவு பகலாக வேலை செய்துள்ளோம். ரொம்ப சுவாரசியமாக மக்களுக்கு பிடித்த திரைப்படமாக இருக்கும் என நம்புகிறேன். இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளியாகும். ஏனென்றால். விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய இருக்கிறது. அது முடிக்க கொஞ்சம் டைம் ஆகும். ஒரு பாகமாகத்தான் வெளியாகிறது.
கமலுடன் இணைகிற படத்திற்கு இப்போது தான் கதை எழுதிக்கிட்டு இருக்கேன். ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. சார்பட்டா பரம்பரை 2வும் ஸ்க்ரிப்ட் லெவலில் தான் இருக்கு. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாரா என்பது இப்போதைக்கு தெரியவில்லை. அவர் நல்ல மனசுக்காரர். வாய்ப்பு இருந்தால் இணைந்து வேலை செய்வோம்" என்றார்.