கதிர் நடிப்பில் வெளியான ஜடா படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமான இயக்குநர் குமரன், தற்போது பறை தனியிசைப்பாடலை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையில் சமீபத்தில் வெளியான இப்பாடல் யூடியூப் தளத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த நிலையில், இயக்குநர் குமரனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"ஜடா படத்திற்கு பிறகு உணர்வுபூர்வமாக ஒரு விஷயம் பண்ணணும்னு நினைத்தேன். இந்த சம்பவம் தொடர்பான ஒரிஷினல் வீடியோவை பார்த்தபோது ரொம்பவும் வலித்தது. முதலில் இதைப் படமாக பண்ணலாம் என்றுதான் நினைத்தேன். பின், ஷான் ரோல்டன் சாருடன் டிஸ்கஸ் செய்தபோது இதை ஆல்பம் பாடலாக உருவாக்கலாம் என்று முடிவெடுத்தோம். அப்படித்தான் இந்த ப்ராஜக்ட் தொடங்கியது. யாரையும் தாக்க வேண்டும் என்பதற்காக இதை உருவாக்கவில்லை. ஒரு மனிதன் சக மனிதனை எப்படி நடத்துகிறான் என்ற வலியை மக்கள் மத்தியில் கடத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே இதை எடுத்தோம். மனிதன் மிருகத்தை பார்த்து பயப்படும் காலம் மாறி, மனிதனை பார்த்தே மனிதன் பயப்படும் நாள் வந்துவிட்டதோ என்ற விஷயத்தை எவ்வளவு தெளிவாக காட்டமுடியுமா அதை சமத்துவத்தை மையமாக வைத்து இந்தப் பாடலை ஆரம்பித்தோம்.
இது மாதிரியான விஷயங்கள் நடப்பது எத்தனை பேருக்கு தெரியும். இன்னைக்கு யாரு ஜாதி பாக்குறாங்க என்று கேட்கும் ஆட்களுக்கு, இங்கு பாக்குறாங்க பாருங்க என்று காட்டுவதற்காக இதை எடுத்துள்ளோம். இன்று ஜாதி பார்க்கவில்லை என்று எளிதாக கூறிவிடுகிறார்கள், ஆனால் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும் அந்த வலி என்னவென்று. அவர்களது குரல் வெளியே கேட்பதில்லை. அந்தக் குரல் வெளியே கேட்க வேண்டும் என்பதற்கான முயற்சியாக பறை பாடலை நான் பார்க்கிறேன்". இவ்வாறு இயக்குநர் குமரன் தெரிவித்தார்.