Skip to main content

சர்வதேச நாடுகளில் ஹிட்டடித்த படம்; இந்தியாவில் வெளியிடத் தடை

Published on 05/10/2024 | Edited on 05/10/2024
pakistan movie The Legend of Maula Jatt banned in india

பாகிஸ்தானில் 2022ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில் வெளியான படம் ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’(The Legend of Maula Jatt). பிலால் லஷாரி இயக்கியுள்ள இப்படத்தில் அங்கு முன்னணி நடிகர்களாக இருக்கும் ஃபவாத் கான், ஹம்சா அலி அப்பாஸி, மஹிரா கான் உள்ளிட்ட பலந் நடித்துள்ளனர். இதில் ஃபவாத் கான் 'ஏ தில் ஹை முஷ்கில்' உள்ளிட்ட சில இந்தி படத்திலும் மஹிரா கான் ‘ராஜா நட்வர்லால்’ என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளனர்.

1979ல் பாகிஸ்தானிய பஞ்சாபி மொழியில் வெளியான 'மௌலா ஜாட்'(Maula Jatt) படத்தின் தழுவலாக இப்படம் உருவாக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது. அதாவது பாகிஸ்தானிய படங்களிலே இந்தப் படம்தான் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கிட்டதட்ட ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. பாகிஸ்தான் திரையுலகில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்துள்ள முதல் படம் என்ற பெருமையை இந்தப்படம் பெற்றுள்ளது. மேலும் பல்வேறு சர்வதேச நாடுகளிலும் வெளியாகி பலரது கனவத்தை ஈர்த்துள்ளது. 

இந்தப் படம் பாகிஸ்தானில் வெளியான அதே ஆண்டான 2022ஆம் ஆண்டு இந்தியாவிலும் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் 2ஆம் தேதி இந்தப் படம் இந்தியாவில் வெளியாகும் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தை வெளியிடக் கூடாது என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அரசியல் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சில இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து படத்தை வெளியிடும் ஜி நிறுவனம், பஞ்சாபில் மட்டும்  வெளியிடத் திட்டமிட்டது. இந்த நிலையில் பஞ்சாபில் திட்டமிட்டப்படி இந்தப் படம் வெளியாகவில்லை. படத்தை வெளியிட இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2016ஆம் ஆண்டு உரி தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தான் திரைக் கலைஞர்கள் அங்கம் வகிக்கும் படங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதே போல் பாகிஸ்தானில் 2019ஆம் ஆண்டு ராணுவ பதற்றங்கள் காரணமாக இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தியாவில் 2008-ல் இரண்டு பாகிஸ்தானிய படங்கள் வெளியாகின. பின்பு 2011-ல் ‘போல்’(BOL) என்ற படம் வெளியாகியிருந்தது. இந்தப் படத்தை அடுத்து 13 வருடங்கள் கழித்து வெளியாகவிருந்த ‘தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட்’ படம் தடை செய்யப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.    

சார்ந்த செய்திகள்