ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரைட்டர்’. இப்படத்தை கோல்டன் ரேஷியோ ஃபிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் ஃபிலிம்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார் இயக்குநர் பா. இரஞ்சித். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (20.12.2021) நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில், "இந்தப் படத்தின் இயக்குநர் ப்ராங்க்ளின் முதலில் திருச்சி பின்னணியில் ஒரு கதை சொன்னார். அந்தக் கதை நன்றாக இருந்தாலும் அதில் ஒரு முழுமை இல்லை. நான் பேசினாலே ஆயிரம் பிரச்சனை வருகிறது. இதில் சரியாக பேசாவிட்டால் இன்னும் பிரச்சனை வரும்டா என்று கூறி வேறு கதையை யோசிக்க சொன்னேன். அதன் பிறகு அவன் சொன்ன ‘ரைட்டர்’ கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதைகள் என்று சில கதைகளைச் சொல்வார்கள். அது மாதிரியான கதைதான் ‘ரைட்டர்’.
‘ரைட்டர்’ படம் பார்த்து முடித்தவுடன் மிகவும் வலியாக இருந்தது. வலியைக் கடத்தக்கூடிய படங்களில் எனக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. அதே நேரத்தில் அதற்கான காரணம் இந்தப் படத்தில் உள்ளது. அந்தக் காரணத்தை மிக முக்கிய காரணமாக கருதுகிறேன். போலீஸ் என்பதே அதிகாரம்தான். அந்த அதிகாரத்திற்குள் அதிகாரமற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை இந்தப் படம் பேசும். நாற்காலியை மையப்படுத்தி அற்புதமான ஒரு காட்சி படத்தில் இருக்கும்.
என் படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நிறைய சிக்கல்கள் வருகின்றன. இரஞ்சித் படத்தில் வேலை பார்த்தவர்கள் என்று நிறைய இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. என்னுடைய உதவி இயக்குநர்கள் கதை சொல்லப்போகும்போது, ‘உங்கள் டைரக்டர் இப்படித்தான் பேசுவாராமே... நீங்களும் அப்படித்தான் பேசுவீங்களா’ என்று கேட்கின்றனர். இது உண்மை. என் படத்தில் நடித்த நடிகர்கள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இது நடக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. இதை என்னிடம் வந்து அவர்கள் சொல்லும்போது, ‘தொடர்ந்து நாம் வேலை பார்த்துக்கொண்டே இருப்போம்டா... யாராலும் மறுக்க முடியாத ஒரு வேலையை நாம் எப்போது செய்கிறோமா அப்போது நம்மைத் தேடி வருவார்கள்’ என்று அவர்களிடம் கூறுவேன்.
என்னுடைய தயாரிப்பு குழுவினர் எனக்குப் பெரிதும் உதவியாக உள்ளனர். அடுத்தடுத்து பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. அதில் மூன்று படங்கள் ரிலீஸிற்கே தயாராகிவிட்டன. இந்தப் பத்து படங்களையும் சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக மனித மாண்பை சீரழித்துக்கொண்டிருக்கிற, மனிதனை மனிதனாகக்கூட ஏற்றுக்கொள்ளாத மனநிலையை மாற்றுவதற்கான படமாகத்தான் பார்க்கிறேன். அந்த வேலையைத் தொடர்ந்து நீலம் செய்யும்" எனக் கூறினார்.