களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தின் மூலம் ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கமல்ஹாசன். இதன்பின் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர், அடுத்து டான்ஸ் மாஸ்டர் என்று பணியை மேற்கொண்டு வந்தார். கடந்த 1973ஆம் ஆண்டு அரங்கேற்றம் என்னும் படத்தில் கமல்ஹாசனுக்கு முக்கியவேடம் ஒன்றை கொடுத்து நடிக்க வைத்தார் கே.பாலசந்தர். அதன்பின் தமிழ் சினிமாவில் நாயகனாக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் பிளாக்பஸ்டர் ஹிட்டுகளையும் கொடுத்துள்ளார். தற்போது அரசியலில் பிஸியாக இருக்கும் கமல் சினிமா துறைக்கு வந்து 60 வருடங்கள் ஆகிவிட்டது. இதை பலரும் கொண்டாடி வருகிறார்கள், குறிப்பாக கமலின் ரசிகர்கள் கமலை பற்றி மற்ற சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ஒரு தொகுப்பாக யூ-ட்யூபில் வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் இயக்குனர் பா.ரஞ்சித் கமல்ஹாசன் குறித்து பேசுகையில், “சினிமாத்துறைக்கு கமல் சார் வந்து இத்துடன் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. அது சாதாரண விஷயமல்ல. நாம் சின்ன வயதிலிருந்து அவருடைய படங்களைதான் பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஒரு ஆர்டிஸ்ட்டாக இந்திய சினிமாவில் நிறைய செய்திருக்கிறார். குறிப்பாக அவருடைய நிறைய படங்கள் எனக்கு பிடிக்கும். அவர் சினிமாவை எக்ஸ்பெரிமெண்டலாக அணுகியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் சினிமாவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்ற அடுத்த ஆளுமையாகதான் அவரை பார்க்க முடியும். கமல் சார் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு முக்கிய வழிகாட்டியாக நிற்கிறார் என்று நான் பார்க்கிறேன். அவருடைய எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும், வேறு இயக்குனர்களை வைத்து அவர் எக்ஸ்பெரிமெண்டலாக செய்திருப்பார் அப்போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன். குறிப்பாக அவர் எழுதின அன்பே சிவமாக இருக்கட்டும், தேவர் மகன், விருமாண்டி. விருமாண்டி படத்தின் வேலைகள் எல்லாம் மிகவும் முக்கியமானதாக நான் நினைக்கிறேன். அதேபோல குருதிப்புனல். ஒரு ஆர்டிஸ்ட்டாக அனைவரும் செய்துகொண்டிருப்பதை தவிர்த்து புதிதாக ஒரு விஷயத்தை செய்தார். தமிழ் சினிமாவிற்கு புது சினிமா லாங்குவேஜை அசால்ட்டாக செய்துவந்தார். இதனால் இந்திய சினிமாவிலேயே அவருக்கு என்று தனி இடத்தை பிடித்து வைத்திருந்தார்.
அவருடைய படங்களில் மஹாநதி, குணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடித்தது. அதில் அவர் காட்டியிருக்கும் மனித உணர்வுகளின் வலி எனக்கு பிடித்தது. இதன்பின் நான் அவருடைய தொடக்கத்தில் கே.பாலசந்தர் படத்தில் நடித்ததை ஒரு தொடர்ச்சியாக பார்க்க தொடன்கினேன். அப்போதுதான் அவருடைய உயர்வு பற்றி தெரிந்தது. எப்படி ஒரு கதாபாத்திரத்திற்காக மாற்றம் செய்கிறார் என்பதை புரிந்துகொண்டேன். கமல் என்றால் இப்படிதான் நடிப்பார் என்று இல்லாமல் பல்வேறு குணாதீசியங்களையும், கதாபாத்திரங்களையும் வெளிகாட்டி பல்வேறு விதமாக நடித்திருப்பார். ஒரு புது கதாபாத்திரமாக நமக்கு அவர் காட்டுவது மிக சவாலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அதில் அவர் தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்.
அவருடைய படங்கள் எல்லாம் எனக்கு ஒரு பாடங்கள் மாதிரி உள்ளது. குறிப்பாக விருமாண்டி படத்தில அவர் சொல்ல வந்த கதையின் களம், அவர் எழுதிய கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம், படத்தில் பயன்படுத்தப்பட்ட சொல்லோடைகள் என்று அனைத்துமே மிகப்பெரிய ஒரு சினிமா லாங்குவேஜை உருவாக்கியது. இந்த 60 வருடங்களில் அவருக்கு வெற்றிகள் இருக்கலாம், தோல்விகள் இருக்கலாம் ஆனால், அதை பற்றியெல்லாம் யோசிக்காமல் தொடர்ந்து எக்ஸ்பெரிமெண்டல் படங்களை கொடுத்திருக்கிறார். சினிமாவின் கலைத் தன்மையை முழுவதுமாக புரிந்துகொண்ட ஒரு நபர் என்றால் அது கமல்ஹாசன்தான். கமல்ஹாசன் தொடர்ந்து போராடிக்கொண்டே நல்ல சினிமாவை தமிழுக்கு கொடுத்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.