நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக படம் முழுவதும் நடித்திருக்கும் படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த முயற்சிக்கு தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலுள்ள மற்ற மொழி பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் மெல்ல மெல்ல தமிழ் பார்வையாளர்களுக்கு சென்றடைந்து வருகிறது.
இந்த படம் ஓடத் தொடங்கியுள்ள நிலையில் புதிய படங்களுக்காக அந்த படத்தை தங்களது திரையரங்குகளில் இருந்து உரிமையாளர்கள் எடுத்து விட்டதாக தகவல் வெளியானது. இதனால் பாத்திபன் திரையுலக நண்பர்களுடன் இணைந்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த சந்திப்பில் ராதா ரவி, இயக்குனர் செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதில், புதிய படங்கள் வருகையால் திரையிடுவதை நிறுத்துவது கருணைக் கொலையைவிடவும் கொடூரமானது என்று பார்திபனர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போதே செய்திதொடர்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் இருந்து பார்த்திபனுக்கு செய்தி ஒன்று வந்தது. தம்மை வீட்டில் வந்து சந்திக்குமாறு அவர் அதில் குறிப்பிட்டிருந்தார், அதனைதொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூவை அவரது இல்லத்தில் நடிகர் பார்த்திபன் சந்தித்து பேசினார். ஒத்த செருப்பு திரைப்படத்தினை தேசிய விருதுக்கு பரிந்துரைக்க உள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அப்போது கூறினார். ஒத்த செருப்பு ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படம் என்றும் அவர் பாராட்டினார்.