அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று காலை 94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த நடிகருக்கான விருது 'கிங் ரிச்சர்ட்' படத்திற்காக வில் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது. விழாவில், வில் ஸ்மித்தின் மனைவியான ஜடா பிங்கெட் ஸ்மித்தின் முடியற்ற தலையை ’ஜி.ஐ. ஜேன்’ படத்தில் வரும் டெமி மூரின் தோற்றத்துடன் ஒப்பிட்டு தொகுப்பாளர் கிறிஸ் ராக் கிண்டலடித்தார்.
இதைக் கேட்ட வில் ஸ்மித் உடனே இருக்கையிலிருந்து எழுந்து ஆஸ்கர் மேடை ஏறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்தச் சம்பவத்தால் ஆஸ்கர் அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விருது வாங்கிவிட்டு தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்த வில் ஸ்மித், இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பும் கோரினார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆஸ்கர் கமிட்டி விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக வில் ஸ்மித் செயலுக்கு ஆஸ்கர் கமிட்டி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் சட்டவிதி மற்றும் கலிஃபோர்னியா சட்டவிதிகளின்படி வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.