Skip to main content

'சூரரைப் போற்று' இந்தி ரீமேக் சர்ச்சை... விளக்கமளித்த சூர்யா தரப்பு!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021

 

suriya

 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்ட்மெண்ட்ஸ் நிறுவனமும் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்தன. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

இந்த நிலையில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய தடை விதிக்கக் கோரி சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இது தொடர்பாக சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அளித்த புகார் மனுவில், இணை தயாரிப்பாளரான தங்களிடம் முறையான அனுமதியைப் பெறாமல் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை 2டி நிறுவனம் விற்றுவிட்டதாகவும், இப்படம் தொடர்பாக இரு நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தை 2டி நிறுவனம் மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த 2டி எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், "கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தைத் தவிர, சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்கு ரூ 3 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் தொடர்ந்த இந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. எந்த ஒரு அடிப்படையும் இன்றி பட வேலைகளை தாமதப்படுத்தவும், அதிகமாக பணம் பெறும் நோக்கத்துடனும் இந்த வழக்கை அவர்கள் தொடர்ந்துள்ளனர். எங்கள் தரப்பின் நியாயங்களை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். 

Next Story

டேனியல் பாலாஜி மறைவு குறித்து சூர்யா வேதனை பதிவு

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
suriya condolence post for daniel balaji passed away

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி(48). திருவான்மியூரில் தனியாக வசித்து வந்த நிலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவு செய்தி அறிந்த இயக்குநர்கள் கௌதம்மேனன், வெற்றிமாறன், அமீர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜி ஏற்கனவே கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவருடைய கண்கள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 

திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் அவரது மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன், ராதிகா, ஆண்ட்ரியா, சந்தீப் கிஷன், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்டவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதில் அதர்வா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜய் சேதுபதியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

இந்த நிலையில் சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில், டேனியல் பாலாஜி மறைவு குறித்து கூறுகையில், “டேனியல் பாலாஜி குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மறைவு அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. ஒரு ஷாட் சரியாக வருவதற்கு கடுமையாக உழைப்பார். காக்க காக்க படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களின் இனிய நினைவுகள் இன்னும் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.