தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 9 வருடங்கள் கழித்து ஒரே தேதியில் வெளியாகவுள்ளன. இதனால் அவர்களது ரசிகர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகின் பார்வையும் தற்போது 'வாரிசு' மற்றும் 'துணிவு' பட ரிலீஸை நோக்கி உள்ளது.
இருவரின் ரசிகர்களும் அவர்களது விருப்ப நடிகர்களின் படங்கள் தனித் தனியே வெளியானாலே பேனர், பட்டாசு என்று திருவிழாவாகவே மாற்றிவிடுவார்கள். இப்போது இருவரின் படங்களும் பொங்கலை முன்னிட்டு ஒன்றாக வருவதால் திரையரங்கம் மற்றும் முக்கியமான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பேனர், போஸ்டர், பட்டாசு என்று போட்டிப் போட்டு பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.
பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்புக் காட்சி ஒதுக்குவது வழக்கம். அந்த வகையில் நாளை அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் திரைப்பட சிறப்புக் காட்சியும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு பட சிறப்பு காட்சியும் திரையிடவுள்ளது. இந்நிலையில், வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இரு படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் திரையரங்குக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.