மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள நிகிலா விமல் தமிழ் கிடாரி, வெற்றிவேல், தம்பி, பஞ்சுமிட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் நடிப்பில் தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள 'ஜோ அண்ட் ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் 'ஜோ அண்ட் ஜோ' படத்திற்காக நிகிலா விமல் அளித்த பேட்டியில் மாட்டு இறைச்சி குறித்து பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "பசுவை கொல்லக் கூடாது என்ற சட்டம் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அது நம் பிரச்சனை இல்லை. விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. பசுவுக்கு மட்டும் தனித்துவமாக எதுவும் இல்லை. கொல்லலாம் என்றால் எல்லாவற்றையும் கொல்லலாம். மாட்டை கொல்லக் கூடாது, ஆனால் கோழியை கொல்லலாம் என்பது என்ன நியாயம். கோழியும் உயிர்தானே. எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றால் எல்லாரும் சைவமாகத்தான் மாற வேண்டும். அது சாத்தியமில்லை. நான் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நிகிலா விமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கேரளா மாநிலத்தில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.