அழகிய கடல், சுத்தமான காற்று என இயற்கை எழில் மிகுந்த இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவு, கேரளக் கரைக்கு 200 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது. மீன்பிடித் தொழிலும், சுற்றுலாவும் இங்கு பிரதான தொழிலாக இருக்கும் நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம்வரை லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்த ஐ.பி.எஸ் தினேஷ்வர் ஷர்மா எதிர்பாராதவிதமாக காலமானதையடுத்து, இந்திய அரசு புதிய நிர்வாகியாக பிரஃபுல் கோடா பட்டேல் என்பவரை லட்சத்தீவின் நிர்வாகியாக நியமித்தது. இதற்கு முன்புவரை லட்சத்தீவின் நிர்வாகியாக ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ்.கள் மட்டுமே நியமிக்கப்பட்ட நிலையில், ஒரு அரசியல்வாதி நிர்வாகியாக நியமிக்கப்பட்டது அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து அவர் கொண்டுவந்த ஒவ்வொரு கட்டுப்பாடுகளும் அந்த ஊர் மக்களைப் பெரிதும் கவலையடையச் செய்திருக்கிறது.
கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தால், இரண்டு நாட்களுக்குள் லட்சத்தீவிற்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஜனவரிவரை ஒரு கரோனா தொற்றுகூட இல்லாத தீவாக இருந்த லட்சத்தீவில், தற்போது 5000க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி லட்சத்தீவில் இதுவரை கொலை, கொள்ளை, கடத்தல் என ஒரு குற்றம் கூட பதியப்படாத நிலையில், தற்போது குண்டாஸ் சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. லட்சத்தீவில் இதுவரை மதுபானங்களுக்குத் தடை நிலவிவந்த நிலையில் தற்போது, மதுபான விற்பனையைத் தொடங்க முடிவெடுத்துள்ளது புதிய அரசு. முஸ்லிம்கள் வாழும் இந்த தீவில் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களில் பணிபுரிந்த சில ஊழியர்களை எவ்வித முன் அறிவிப்புமின்றி நீக்கியுள்ளது.
இப்படியான பல பிரச்சினைகள் லட்சத்தீவில் தொடர்வதையடுத்து, அங்குள்ள மக்கள் தங்களுக்கான அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால், இந்தக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தப் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் தற்போது லட்சத்தீவு காப்பாற்றப் பட வேண்டும் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், கார்த்தியின் 'தம்பி' பட நடிகை நிகிலா விமல் லட்சத்தீவு குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"இப்போது லட்சத்தீவில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து மீண்டும் உட்கார்ந்து எதுவும் பேச முடியாது. அங்கு நடக்கும் எல்லாவற்றையும் மிகவும் உதவியற்றதாக உணர்கிறேன். அது மிகப் பெரிய அநீதி என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, யூனியன் பிரதேசத்தின் முந்தைய நிர்வாகிகள் அனைவரும் ஊர் முன்னேற்றத்திற்கான காரியங்களைச் செய்திருக்கிறார்கள். ஆனால், திடீரென்று தலைமுறைகளாக நடைமுறையில் உள்ள சட்டங்களை மாற்ற விரும்பும் ஒருவர் நம்மிடம் இருந்துவருகிறார். பள்ளிகள், விவசாயம், சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி ஆகியவற்றில் தப்பாக விளையாடிய அவர், உலகில் உள்ள மிகச்சிறந்த மனிதர்களுக்கு வாழ்க்கையைக் கடினமாக்கிவருகிறார். பசுமை மண்டலமாக இருந்த ஒரு இடம் திடீரென அவரது பொறுப்பற்ற தன்மையால் தொற்றுநோயை சமாளிக்க வேண்டியிருக்கிறது. புதிய நிர்வாகியின் சர்வாதிகாரத்தால் மக்கள் பல ஆண்டுகளாக அவர்கள் பெற்ற வேலைகளை இழந்துவிட்டார்கள். ஒரு தனிப்பட்ட மனிதனின் முடிவால் மக்கள் தலைமுறைகளாக அவர்கள் சாப்பிட்ட உணவை உண்ண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம். ஏதாவது செய்ய வேண்டும். ஒன்றாக சேர்ந்து லட்சத்தீவை மீட்போம்" என கூறியுள்ளார்.