நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்குத் தடுப்பூசி மற்றும் கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர். மேலும், சில பிரபலங்கள் மக்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் செய்துவரும் நிலையில், சிம்புவின் 'ஈஸ்வரன்' படத்தின் நாயகி நடிகை நிதி அகர்வால் distributelove.org என்ற இணையதளத்தின் மூலம் மக்களுக்குத் தான் உதவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..
"எல்லோருக்கும் வணக்கம்,
நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதாக நம்புகிறேன்,
ஊரடங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை நான் அறிவேன். இந்த சவாலான காலங்களில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். முடிந்தவரை எல்லா வழிகளிலும் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும். distributelove.org என்ற இணையதளம் மூலம் ஆதரவின்றி கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான ஒரு முயற்சியைக் கையிலெடுத்துள்ளோம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் தங்கள் விவரங்களை இந்த தளத்தில் பூர்த்திசெய்து எங்களைத் தொடர்புகொள்ளலாம். எங்கள் குழு விரைவில் உங்களை அணுகும். எதுவும் நீண்டகாலம் நீடிக்காது. கரோனா வைரஸ் கூட அப்படித்தான். எனவே வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். கடுமையாகப் போராடுங்கள். அனைவருக்கும் நிறைய அன்பும் பலமும் சேரட்டும்" என கூறியுள்ளார்.