இந்திய சினிமாவில் பல பயோபிக்கள் வெலியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படங்களாக வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்கள் என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.
தமிழ் சினிமாவில் தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாக உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக எடுக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. சாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.
இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நரேந்திர மோடி வாழ்க்கையை பற்றி இன்னொரு படம் தயாராக உள்ளது. இந்த படத்துக்கு ‘மன் பைராகி’ என்று பெயர் வைத்துள்ளனர். தமிழில் ‘கர்மயோகி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு சஞ்சய் திரிபாதி திரைக்கதை எழுதி இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார். நரேந்திர மோடியின் வாழ்க்கையில் இதுவரை சொல்லப்படாத சம்பவங்கள் படத்தில் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்தில் எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்தக்கூடிய விஷயங்கள் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் இளமை கால வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை தொகுத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே படமாக்குகிறேன் என்று சஞ்சய் லீலா பன்சாலி கூறினார்.