Skip to main content

“மிகச்சிறந்த தமிழ் இயக்குநரோடு இணையவுள்ளேன்” - நானி சஸ்பென்ஸ்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

nani speech at hi nanna movie press meet

 

வைரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நானி, மிருணாள் தாக்கூர் நடிப்பில், உருவாகியுள்ள படம் 'ஹை நான்னா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டிசம்பர் 7 அன்று உலகெங்கும் வெளியாகிறது. இதையொட்டி, நானி சென்னையில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாள‌ர்களை சந்தித்தார். 

 

நானி பேசியதாவது, “நான்னா என்றால் தமிழில் அப்பா, ஆனால் படத்தின் பெயர் எல்லா மொழியிலும் ஒரே மாதிரி இருக்கட்டும் என்று நினைத்தோம், அது லிப் சிங்க் மற்றும் பலவற்றுக்கும் உதவியாய் இருந்தது. படத்தில் நிறைய முறை 'நான்னா' என்ற வார்த்தை வருகிறது, அதுவும் ஒரு காரணம். இது ஒரு மிக அழகான படம். படத்தை முழுதாகப் பார்த்த பிறகு சொல்கிறேன், இந்தப்படம் எனக்கு பெருமை தரும் படம். ஒரு காதல் படம், ஆனால் பரபரவென போகும் கதை என‌ கண்டிப்பாக உங்கள் மனதில் இடம்பிடிக்கும் படமாக இருக்கும். தமிழில் நான் நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து எப்போதும் எனக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். இது ஒரு முறை பார்க்கும் படமாக இருக்காது, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்” என்றார்.

 

மேலும், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு நானி பதிலளிக்கையில், “எனக்கு தமிழ்ப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். மணிரத்னம் சார், கமல் சார் படங்களின் தீவிர ரசிகன் நான். ஆனால் தமிழ் முழுமையாக பேச வராது, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். விரைவில் பேச முடியும் என நம்புகிறேன். ஆரம்பத்தில் தமிழ் இயக்குநர்களோடு வேலை பார்த்தேன். ஆனால், அதை இங்குள்ள மக்கள் தெலுங்குப் படமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள், தெலுங்கு மக்கள் தமிழ்ப் படமாக பார்க்க ஆரம்பித்தார்கள். பின்னர் 'பாகுபலி', 'காந்தாரா' போன்ற‌ படங்கள் வந்த பிறகு தமிழ் நடிக‌ர், தெலுங்கு நடிகர் என்று பிரித்து பார்த்து படம் எடுக்கத் தேவையில்லை, சொல்லும் கதைக்கு உண்மையாக இருந்தால் போதும், அது மக்களிடம் போய்ச் சேரும் எனப் புரிந்தது, எனவே தான் நான் கதைகளுக்கு முக்கியத்துவம் தருகிறேன். தமிழ், தெலுங்கு எனப் பிரித்து வைக்க தேவையில்லை, என் எல்லாப் படங்களும் இங்கு தமிழில் வரும். 

 

நடிகை மிருணாள் இந்தப் பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று மொத்த டீமும் நினைத்து தான் தேர்வு செய்தோம், அதை அவர் அற்புதமாக செய்துள்ளார். ஒரு மிகச்சிறந்த தமிழ் இயக்குநர், எனக்குப் பிடித்தவர், அவர் எனக்காக ஒரு கதை சொன்னார், விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வரும். காதலை உணர்வுப்பூர்வமாக சொன்னால், அதை விட பெரிய ஆக்சன் திரில்லர் எதுவும் கிடையாது. அது பயங்கரமாக இருக்கும். அதை இந்தப்படம் பார்க்கும் போது உணர்வீர்கள். 

 

முன்னர் எல்லாம் முத்தக் காட்சியில் திரை இருட்டாகிவிடும், 2023ல் கிஸ் பெரிய விசயம் இல்லை. இங்கு கல்யாணம் ஆனவர் இருப்பீர்கள், மனைவியை முத்தம் கொடுக்காமல் யாராவது இருப்பார்களா? முன்னர் மாதிரி மரத்தை சுற்றுவது, பூவைக் காட்டுவது என்று இப்போதைய ஆடியன்ஸை ஏமாற்ற முடியாது, முத்தத்தை திரையில் காட்டலாம் தவறில்லை.  நம் வாழ்க்கையில் பெண்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள், படத்தில் மட்டும் ஏன் இருக்கக்கூடாது? என் படத்தில் அவர்கள் பெரிய இடம் வகிப்பது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்