இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள் ஒரு விருதினைக் கூட வாங்கவில்லை. கடைசி விவசாயி படம் மட்டும் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் வென்றுள்ளது. அதை தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் 'கடைசி விவசாயி' படத்திற்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த கல்வித் திரைப்படம் - 'சிற்பங்களின் சிற்பங்கள்' (லெனின்) தேர்வானது.
இந்நிலையில் இந்த விருதில் தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்காகச் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கு கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டதாகத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ரசிகர்களைத் தாண்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என விமர்சனம் செய்திருந்தார்.
மேலும் திரைப் பிரபலங்களும் வருத்தமடைந்துள்ளனர். தெலுங்கு நடிகர் நானி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஜெய் பீம் படத்திற்கு விருது கிடைக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் ஜெயிபீம் என்ற ஹேஷ்டேக் குறிப்பிட்டு இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டுள்ளார்.
அதோடு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், "ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது இந்தியாவின் குரல், அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா?" என அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டபோது சூரரைப் போற்று (5), சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (3), மண்டேலா (2) உள்ளிட்ட படங்கள் என மொத்தம் தமிழ் படங்கள் 10 விருதுகளும், மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் (3), மாலிக் (1) போன்ற படங்கள் விருதுகளை வென்றது.
அப்போதே பல முறை தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், "தேசிய விருது குழுவில் இந்தி பட ரசிகர்கள் தான் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். விருதுக்கு தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு என்ன அளவுகோல் என்று கூட தெரியவில்லை. தேசிய விருது இப்பொழுது மோசமான நகைச்சுவையாக மாறியிருக்கிறது" என விமர்சித்திருந்தார். தமிழில் பல திரைப் பிரபலங்கள் விருதுகளை விட மக்கள் வாழ்த்து தான் பெரியது எனப் பேசியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.