இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதி வழங்கி உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு (நலிவுற்றகலைஞர்கள்) தமிழ்நாடு திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவிகேட்டு நடிகர் சங்கம் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதம்...
தேதி : 31.03.2020
அனுப்புநர்
M.நாசர், (முன்னாள் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட நடிகர்)
எண். 245, குகன் தெரு, காமகோடி நகர்,
வளசரவாக்கம், சென்னை – 87.
பெறுநர்
மாண்புமிகு. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் அவர்கள்
செய்தி மற்றும் விளம்பர துறை,
தலைமை செயலகம், சென்னை – 600 009
அன்புடையீர் வணக்கம்,
பொருள் : தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு (நலிவுற்றகலைஞர்கள்) தமிழ்நாடு திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவிடுமாறு கோருதல் – தொடர்பாக.
----------
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது. இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் மாவட்டங்களில் நடைபெற இருந்த நாடக விழாக்களும் நடைபெறாமல் போனதால் அதையே நம்பி இருக்கும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்படம் / நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தாங்கள் இதனை கருத்திற்கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இக்காலகட்டத்தில் தாங்கள் செய்யும் பேருதவி எங்களின் மனதில் நீங்காத இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்கள் அன்புள்ள
(M.நாசர்)
நகல்:
1 உயர்திரு.அரசு முதன்மை செயலாளர் அவர்கள்
செய்தி மற்றும் விளம்பர துறை, தலைமை செயலகம், சென்னை – 600 009.
2. உயர்திரு. இயக்குநர் அவர்கள் செய்தி மற்றும் விளம்பர துறை
தலைமை செயலகம், சென்னை – 600 009
3. திரு.தனி அலுவலர் அவர்கள்,
தென்னிந்திய நடிகர் சங்கம்,
G1,எண்.21, நந்தா அப்பார்ட்மெண்ட், ஹபிபுல்லா சாலை, தி.நகர் , சென்னை - 17. என குறிப்பிட்டுள்ளனர்.