Skip to main content

"அவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும்" - நடிகர் சங்கம் இரங்கல்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

vgdagv

 

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74. பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்... 

 

"நடிகர் பாண்டு அவர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. கோவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு மரணமடைந்தார். 'கரையெல்லாம் செம்பகப் பூ' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் புகழ் பெற்றார். 'சிரித்து வாழ வேண்டும்', 'கடல் மீன்கள்', 'பணக்காரன்', 'நடிகன்', 'நாளைய தீர்ப்பு', 'ராவணன்', 'முத்து', 'உள்ளத்தை அள்ளித் தா', 'நாட்டாமை', 'காதல் கோட்டை', 'வாலி', 'கில்லி', 'சிங்கம்', 'காஞ்சனா-2' போன்ற பல ஹிட் படங்கள் உட்பட 230க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். டி.வி. சீரியலிலும் நடித்துள்ளார். 

 

பாண்டு சிறந்த ஓவியராகவும் தன் திறமைகளை வெளிப்படுத்திய கலைஞர் ஆவார். எழுத்துகள் வடிவமைக்கும் டிசைனராக கேபிட்டல் லெட்டர்ஸ் என்ற கம்பெனி மூலம் உலகம் முழுக்க அறியப்பட்டவராக இருக்கிறார். இவரது மனைவியும் ஓவியர் தான். இவரது எதிர்பாராத மறைவு நடிகர் சமூகத்துக்கு மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக நாங்களும் பங்கு கொண்டு அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். நன்றி. #RIP !!" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்