கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். அதேபோல சீனா தரப்பிலும் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிட மறுக்கிறது. சமீபத்தில் நடத்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
இதனைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்தியர்கள் பலரும் சீனப் பொருட்களை வாங்க மாட்டோம் என்று சாலைகளில் சீனப் பொருட்களை எரித்துத் தங்களின் எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். அதேபோல சீனாவின் பிரபல செயலி(App)களையும் தங்களின் மொபைல்களில் இருந்து நீக்கி வருகின்றனர்.
தற்போது தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிப்ரான், தனது டிக்-டாக் மற்றும் ஹலோ ஆப்களில் இருந்த தனது கணக்கினை நீக்கிவிட்டார். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்திலும் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளார். ஜிப்ரானின் இந்தச் செயலுக்குப் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.