நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி வெற்றியடைந்த படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து இயக்கிய படம் இது. டி.இமான் இசையமைத்திருந்தார். கண்ணான கண்ணே என்ற பாடலை சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். படம் வெளியானபோதே இந்த பாடல் செம வைரலானது. இதனையடுத்து இந்த பாடலை கண்பாரவை தெரியாத திருமூர்த்தி என்பவர் பாடியது செம வைரலானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த் திருமூர்த்தி இசையின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராக இருப்பதை தெரிந்துகொண்ட இசயமைப்பாளர் டி.இமான், அந்த இளைஞரை நேரில் அழைத்து பாராட்டியதோடு, அவருக்கு வாய்ப்பளிப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில் திருமூர்த்தியை பின்னணி பாடகராக இமான் அறிமுகம் செய்ய உள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில், “நொச்சிப்பட்டி திருமூர்த்தியை பின்னணி பாடகராக அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சீறு படத்திற்காக திருமூர்த்தி பாடியுள்ள ஆத்மார்த்தமான பாடல் விரைவில் வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார். இச்செயலால் டி.இமானுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.