Skip to main content

“காமராஜருக்காக குரல் கொடுத்ததில் இருந்த சிரமம்” - டப்பிங் அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

 M.S.Bhaskar Interview

 

சின்னத்திரையில் ஆரம்பித்து பெரிய திரையில் குணச்சித்திர நடிகராக வலம் வரும் எம்.எஸ். பாஸ்கர் அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். தன்னுடைய திரையுலக அனுபவம் பற்றி பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

 

என்னுடைய சகோதரியும் ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். அதற்குப் பிறகு நானும் டப்பிங் பேசினேன். கொஞ்சம் கொஞ்சமாக திரையில் தோன்றினேன். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வருகிறேன். சினிமாவில் நான் செய்த விஷயங்களில் எனக்கு எந்தப் பெருமையும் கிடையாது. என்னை நம்பி எனக்கு இயக்குநர்கள் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்கள் தான் என்னுடைய கேரக்டரை வடிவமைக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கேரக்டரை நாம் உள்வாங்கி நடிக்கிறோம். சிவாஜி அப்பாவின் மிகப்பெரிய வெறியன் நான். கலைஞர் அப்பாவின் தமிழுக்கு நான் அடிமை.

 

என்னுடைய தகப்பனாரின் அறிவுரைகள் என்னை வழிநடத்துகின்றன. நாடகங்களில் நான் அதிகம் பங்கெடுக்கவில்லை என்பதுதான் உண்மை. என்னுடைய சகோதரிகள் நாடகங்களில் நடித்து வந்தனர். டிவி மற்றும் ரேடியோ நாடகங்களில் நான் நடித்திருக்கிறேன். மேடை நாடகங்களில் நான் அதிகம் நடித்ததில்லை. சீரியல்களில் நான் நிறைய நடித்தேன். நடிப்பது போதும் என்கிற எண்ணம் இன்று வரை எனக்கு வந்ததில்லை. கமல் அண்ணா எல்லாம் இன்று வரை புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதுபோல் சினிமாவில் பலரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற சிந்தனையிலேயே இருப்பார்கள். 

 

நடிகர்களில் அனைவரையும் எனக்கு பிடிக்கும். மிகவும் பிடித்தது சிவாஜி அப்பாவையும் கமல் அண்ணாவையும். ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, தங்கவேல் போன்ற பல நடிகர்களை எனக்கு பிடிக்கும். டப்பிங் கலைஞர்களுக்கு மிமிக்ரி திறமை கொஞ்சம் வேண்டும். யாருடைய கேரக்டருக்காக நாம் பேசுகிறோமோ, அவருடைய உருவத்திற்கு ஏற்ற குரலை நாம் வெளிப்படுத்த வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தான் மோர்கன் ஃபிரீமனுக்கு மூன்று வகைகளில் என்னால் டப்பிங் கொடுக்க முடிந்தது. இப்போதும் டப்பிங் செய்ய என்னை அழைத்தால் நான் செல்கிறேன்.

 

பிரம்மானந்தம் அவர்களுக்கு என்னுடைய குரல் நன்றாகப் பொருந்தும். 'மொழி' படத்தில் மட்டும் நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததால் நான் அவருக்கு டப்பிங் கொடுக்கவில்லை. காமராஜர் ஐயாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவருக்கு நான் டப்பிங் கொடுத்தது சவாலான ஒன்றாக இருந்தது. அவர் நம்முடைய காலத்தில் வாழ்ந்தவர். அதனால் அவர் பேசிய பல ஒலிநாடாக்களைக் கேட்டு பயிற்சி எடுத்துக்கொண்டேன். 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரில் நான் நன்றாக நடிக்கிறேன் என்றும், என்னைத் தொடர்ந்து பயன்படுத்துமாறும் ராதிகாவிடம் சொன்னது கலைஞர் அப்பா தான். 

 

அதன் பிறகு தான் தொடர்ந்து ஆறு வருடங்கள் வரும் வகையில் அந்த கேரக்டர் வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்தில், மாவட்டத்தில் வாழும் மக்கள் எவ்வாறு பேசுகிறார்கள் என்பதை நான் நன்கு கவனிப்பேன். அதனால் தான் சினிமாவில் பல வட்டார மொழிகளில் என்னால் பேச முடிகிறது.  எப்போதும் அனைவரோடும் ஜாலியாக இருக்க வேண்டும். கோபம் என்பது எனக்கு பெரும்பாலும் வராது. ஆனால் ரௌத்திரமும் பழக வேண்டும். மக்களோடு மக்களாக இருக்கவே நான் எப்போதும் விரும்புகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்