Skip to main content

"என்ன நடக்கிறது! ஒன்றுமே புரியவில்லை!" - எம்.எஸ். பாஸ்கர் வேதனை! 

Published on 18/06/2021 | Edited on 18/06/2021

 

 bcbncn

 


செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் சிவசங்கர் பாபாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

பாலியல் வன்கொடுமை செய்த சிவசங்கர் பாபா மீது பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கர் இச்சம்பவம் குறித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... 


"வணக்கம் . நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். 

என்ன நடக்கிறது! ஒன்றுமே புரியவில்லை! 

'ஆசிரியர்'
என்ற போர்வையிலும், 'ஆன்மீகம்'
என்ற போர்வையிலும் அத்துமீறல்கள்.

ஏற்கனவே 'கரோனா'
பெருந்தொற்று உலகையே நடுங்க வைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கொடுமைகள் வேறா?

 

பள்ளிக்கூடம்....

சென்றுதான் ஆக வேண்டும்.
குழந்தைகள் படித்துத்தான் ஆக வேண்டும்.
தொற்றின் தீவிரத்தால் 'ஆன்லைன்' வகுப்புகளில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு. கைது செய்யப்பட்ட ஆசிரியர் "பல ஆண்டுகளாக இது நடக்கிறது... நான் மட்டும் இல்லை... இன்னும் பலரும் உண்டு"... என்கிறார். ஒரு பள்ளி மட்டுமல்ல. பல பள்ளிகளில் இதே தவறு நடக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

ஆன்மீகம்.

புனிதமான விஷயம். 
அது எந்த 'மார்க்கமாயினும்'
(மதம்)சரி..

'குரு' என்ற ஒருவர் அவசியம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 
ஆனால் அவர் 'குரு' என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவரா என்பதை அறிதல் அவசியமன்றோ?

இறைவனுக்கும் , பக்தர்களுக்கும் இடையில் 'இடைத்தரகர்கள்' எதற்கு?

'இவர் மூலமாகத்தான் நீ என் அருளைப் பெற முடியும்' என்று இறைவன் எங்காவது சொல்லியிருக்கிறாரா?

படித்தவர்களும், படிக்காதவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று எதற்காக ஒருவனின் கால்களில் விழ வேண்டும். அவனை கடவுள், தெய்வம், சாமீ என்று ஏன் துதிக்க வேண்டும்!

"நரிக்கு நாட்டாம குடுத்தா... கெடைக்கு ரெண்டு குட்டி கேக்கும்" என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோல்தானே இருக்கிறது இந்த ஈனச்செயல். உண்மையான ஞானியோ, சித்தனோ தன்னை ஒருபோதும் விளம்பரப்படுத்திக்கொள்வதில்லை. 

இவர்களுக்கு கூட்டம் கூடுவதும், இந்தக் கோமாளிகள் வேஷம் போட்டு ஆடுவதும், பிறகு சுயரூபம் தெரிந்தவுடன் தப்பித்து ஓடுவதும், 'முடிந்தால் கண்டுபிடி' என்று கண்ணாமூச்சி விளையாடுவதும் 

ஆன்மீகத்தையே அசிங்கப்படுத்தும் இழிசெயலன்றோ?

இவர்களால் உண்மையான குருமார்களுக்கும்... ஏன்
இறைவனுக்குமே
பழிச்சொல் வராதா?
இறை நம்பிக்கை உடையவர்களை மற்றவர்கள் கிண்டலும் , கேலியும் செய்ய வழி வகுக்காதா?

அரசாங்கத்திற்கு இவர்கள் பின்னாலேயே அலைவதா வேலை? ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமித்து கண்காணித்துக் கொண்டே இருக்க முடியுமா?
ஏற்கனவே அரசுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள்.

மாண்புமிகு. பிரதமர் அவர்களும்,
மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், அனைத்துத்துறை சார்ந்தவர்களும், உயிரைப் பணயம் வைத்து இரவு பகலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் இந்தத் 'தலைவலி'வேறு!

ஆக..... 

கல்வியையும், ஆன்மீகத்தையும் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் குற்றவாளிகளை 
கழிவுகளாக எண்ணி, சிந்தை தெளிந்து மக்களாக விலகிவருவதே 
நாட்டுக்கும் நல்லது.
நம்பிக்கைக்கும்
நல்லது.

- வேதனையுடன் எம்.எஸ். பாஸ்கர்.
🙏🙏🙏🙏🙏" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்