Skip to main content

''காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து இப்படிச் செய்யாதீர்கள்!'' - எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்!

Published on 24/04/2020 | Edited on 24/04/2020


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருந்த 55 வயது மருத்துவர் சைமன் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு தலைவர்கள், மருத்துவர்கள், திரையுலகினர், மருத்துவச் சங்கத்தினரும் பலரும் வேதனை தெரிவித்து வரும் நிலையில் சைமனின் இறுதிச் சடங்கு குறித்து நடிகர் எம்.எஸ் பாஸ்கர் சமூகவலைத்தளத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...

 

 

 

 

 

mvv


"மனதுக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்த ஸ்தானம். மருத்துவர்களுக்கும், கடவுளுக்கும் மட்டும் தான் உயிரைக் காப்பாற்றும் சக்தி இருக்கிறது. இந்தக் கரோனா தொற்றுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இதர நோய்த் தாக்கியவர்களுக்குக் கூட தனது உயிரை மதிக்காமல் பக்கத்தில் நின்று வைத்தியம் பார்த்துச் சரிசெய்து அனுப்புகிறார்கள். அப்படிப்பட்ட மருத்துவர்கள் கரோனா தொற்று வந்து இறந்துவிட்டால், புதைப்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்று மண்டை உடைப்பதும், கல்லைக் கொண்டு அடிப்பது, ஆம்புலன்ஸை உடைப்பதும் எந்தவிதத்தில் நியாயம். சுடுகாடு யாருக்குச் சொந்தம். அப்புறம் எங்குக் கொண்டு போவது. மருத்துவர்கள் வைத்தியம் பார்க்கவில்லை, நம்மைக் காப்பாற்றவில்லை என்றால் நாம் எல்லாம் அனாதை பிணமாகிவிடுவோம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இடம் கொடுக்க மாட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும். சமரசம் உலவும் இடமே என்று சுடுகாட்டைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். எங்குப் போனது உங்கள் சமரசம்.
 

ஏன் இப்படியெல்லாம் செய்கிறீர்கள். வெளியூருக்குப் படப்பிடிப்புக்குச் செல்லும் போது, ஒரு குரங்கு வண்டியில் அடிபட்டுச் செத்து விட்டது. அந்த இடத்தில் சுமார் 100 குரங்குகள் கூடிவிட்டது. ஒட்டுமொத்தமாக டிராஃபிக் ஜாம். அனைத்து குரங்குகளும் கண்ணீர் விட்டு அழுகிறது. அடிபட்டுச் செத்த குரங்கைத் தூக்கிக் கொண்டு இதர குரங்குகள் சென்றது. குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்கிறார்கள் அல்லவா. அந்தக் குரங்கிற்கு இருக்கிற அறிவு, நமக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது. தயவு செய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். யாராக இருந்தாலும் பிறந்தால் குழந்தை, வளர்ந்தால் மனிதன், இறந்தால் பிணம் இவ்வளவு தான். தயவு செய்து இதே மாதிரி செய்யாதீர்கள். ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்