தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு விடுத்த வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் தன்னுடைய வீட்டில் மரக்கன்றை நட்டு வைத்த புகைப்படம் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.
திரைத்துறையில் இருப்பவர்கள் அடிக்கடி குறிப்பிட்ட நடிகர்களை டேக் செய்து சேலஞ்ச் விடுப்பது வாடிக்கையான ஒன்று. சேலஞ்ச் விடுக்கப்பட்ட பிரபலமும் அதை செய்து முடிப்பார்கள். இது அவர்களின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயமாகவும், மக்களுக்கு இதன் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று ஒன்றை தன் வீட்டில் நட்டார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட அவர் நடிகர் விஜய், ஜூனியர் என்.டி.ஆர்., நடிகை சுருதி ஹாசன் உள்ளிட்டவர்களை டேக் செய்து இதனைத் தொடர்ந்து நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதனை ஏற்று நடிகர் விஜய் தன் வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு அவரது வேண்டுகோளை நிறைவேற்றினார்.
இந்நிலையில், இந்த பசுமை இந்தியா சேலஞ்சை முதன் முதலில் தெலங்கானாவை சேர்ந்த அமைச்சர் சந்தோஷ் என்பவர் சமந்தாவிடம் சவால்விட்டு தொடங்கி வைத்தார். அதுதான் இப்படி நீண்டு விஜய் வரை வந்திருக்கிறது.
அந்த வகையில் எம்.பி. சந்தோஷ் விஜய்யை பாராட்டியுள்ளார். அதில், “பிரபலங்களால் செய்ய முடிவது இதுதான். உங்கள் சக நடிகரான மகேஷ்பாபுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி விஜய் . உங்கள் ரசிகர்களின் பக்கத்திலிருந்து கிடைத்த மிகப்பெரிய ஆதரவை நாங்கள் கவனித்தோம். நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைய வேண்டும் என்ற #GICன் எண்ணத்தில் எந்த தொய்வும் ஏற்படாது என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.