இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவர் தனது சினிமா வாழ்க்கையில் 'மாம்' படத்தின் மூலம் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருந்தார், அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களை பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையை தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார். போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்த படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. சிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருதை பெற்று தந்த இந்த படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது...."மாம் படம் ரிலீஸ் ஆன எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்கு கொண்டு இதயத்தை தொடும் திரைப்படத்தை மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்து செல்வதில் பெருமைப்படுகிறோம்" என்றார். ரவி உத்யாவார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த மாம் திரைப்படம், இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தவிர்த்து, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை தந்திருக்கிறது. 75வது கோல்டன் குளோப் விருதுக்கு வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் தகுதி பெறவும் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.