கரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகிறது. இரண்டாயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக இந்த நோயின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு துரித நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், பிரதமர் மோடி நேற்று ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டி, வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து சமூகவலைத்தளத்தில் பலரும் மோகன் ராஜாவின் 'வேலைக்காரன்' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நினைவுகூர்ந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் மோகன் ட்வீட் செய்துள்ளார். அதில்...
"ஆம்.. இந்தப் பிரச்சினையை வெல்ல ஒரு தேர்வுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் அது நமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால் நமக்கு மத்தியில் நேர்மறை எண்ணங்கள் இருப்பதே இப்போதைய உடனடி தேவை. அதைத்தான் பிரதமர் மோடி நம்மிடம் கோரிக்கையாக வைத்துள்ளார். ‘வேலைக்காரன்’ படத்தின் லைட் அடிக்கும் ஐடியாவை நினைவுகூர்ந்த அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.