ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12ம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுக்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது உண்மைதான் எனத் திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் இயக்குநர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய வீடியோ ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில், “நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் தான் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்” எனப் பேசி இருந்தார். இதையடுத்து எந்த ஆதாரமும் இல்லாமல் மோகன் ஜி குற்றம் சாட்டுகிறார் எனக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கூறி வந்தனர்.
இந்த நிலையில் மோகன் ஜி. மீது திருச்சி சமயபுரம் கோவிலில் உள்ள இந்து அறநிலையத்துறையில் மேலாளராக பணிபுரியும் கவியரசு என்பவர் திருச்சி மாவட்ட காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில், “பழனி கோயில் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்துள்ளார். மேலும் திருப்பதி லட்டு விவகாரம் அடங்குவதற்குள் தமிழக மக்களிடையே மதநல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பொய்யான செய்தியை பரப்பியுள்ளார்” என குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளார். இதன் பேரில் மோகன் ஜி. மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் சென்னை சென்று மோகன் ஜி-யை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். பின்பு திருச்சிக்கு அழைத்து சென்ற அவரை காவல்துறையினர் விசாரித்தனர். இதைத் தொடர்ந்து அவர் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.