'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான மோகன் ஜி 'திரௌபதி' மற்றும் 'ருத்ர தாண்டவம்' ஆகிய படங்களின் மூலம் பிரபலமானார். இந்த இரு படங்களும் வெளியான போது பல்வேறு சர்ச்சைகள் கிளம்பினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றன. ஒரு சாரார் மத்தியில் இப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்தாலும் சினிமா ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றன. இதனைத் தொடர்ந்து மோகன் ஜி தற்போது இயக்குநர் செல்வராகவன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி நடிக்கவுள்ளார். சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'பகாசூரன்' என்ற பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் படப்பிடிப்பு வரும் (18.4.2022) திங்கட்கிழமையில் இருந்து தொடங்கி முழு வீச்சில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் பகாசூரன் என்ற அரக்கனுக்கு ஊர் மக்கள் உணவுப் பொருட்களை அனுப்பி வைப்பார்கள். ஆனால் பகாசூரன் உணவுப் பொருட்களுடன், உணவு கொண்டு வருபவர்களையும் தின்றுவிடுவார் என்றும், அதனால் குந்தி தேவியின் மகன் பீமன் பகாசுரனைக் கொன்றுவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அரக்கனின் பெயரைப் படத்திற்கு மோகன் ஜி வைத்துள்ளதால், இந்த மகாபாரத கதையிலிருந்து எதையோ இப்படத்தில் கூற உள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே பகாசூரன் திரைப்படம் வெற்றி பெற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். இதனை ரீட்வீட் செய்த மோகன் ஜி "மிக்க நன்றி அண்ணாமலை அண்ணா. உங்களின் வாழ்த்து எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மிக்க நன்றி @annamalai_k னா.. உங்கள் வாழ்த்து எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ❤️🙏 #பகாசூரன் https://t.co/CA0K6l5JbJ
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 16, 2022