இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் ஆறுமுறை தேசிய விருது, கணக்கில் அடங்கா பல்வேறு மாநில விருதுகள் என இசைத்துறையில் வரலாறு படைத்துள்ளார்.
எஸ்.பி.பி-யின் மகன் எஸ்.பி.சரண் கடந்த 23ஆம் தேதி முதல்வர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் எஸ்.பி.பி-யின் நினைவை போற்றும் வகையில் அவர் வசித்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் எஸ்.பி.பி மறைந்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் கடக்கிறது. அவரது நினைவு தினமான இன்று அவரது நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதே வேளையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எஸ்.பி.பி. வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு ‘எஸ்.பி.பி. சாலை’ என பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். எஸ்.பி.பி-யின் நினைவை போற்றும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டதாகக் கூறியுள்ளார்.