'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் 'விஜய் தேவரகொண்டா'. இவர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் டப் செய்து பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 25-ல் வெளியாகவுள்ளது. இப்படத்தினை பூரி ஜெகன்நாத், சர்மீ, கரண் ஜோகர் உள்ளிட்டோர் 'தர்மா ப்ரொடக்ஷன்' பேனரில் தயாரிக்கின்றனர். அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்நிலையில் 'லைகர்' படத்தின் டப்பிங்கை குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' நிறைவு செய்துள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் மைக் டைசன் பேசும் ஒரு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் "என்னிடம் அன்பாக நடந்துகொண்டதற்கு மிக்க நன்றி" என கூறியுள்ளார். அதோடு மைக் டைசன் டப் செய்யும் காட்சியை போஸ்டராக வெளியிட்டுள்ளது படக்குழு. இப்போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.