உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தங்களின் சொந்த ஊரைவிட்டு வெளியூருக்கு பிழைக்கச் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் சொந்த ஊருக்குச் செல்வதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டது. பலர் போக்குவரத்து இல்லாததால் ஆயிரம் கி.மீ. மேல் நடந்தே சென்ற அவலமும் ஏற்பட்டது. இதுபோல நடந்து சென்றவர்களில் பலரின் உயிரும் பிரிந்துள்ளது.
அப்போது பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது சொந்த செலவில் வாகனங்களை ஏற்பாடு செய்து, புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். மும்பையில் தவித்த 200 தமிழக தொழிலாளர்களையும் அவர் பேருந்தில் ஊருக்கு அனுப்பினார். ஒடிசாவைச் சேர்ந்த 169 பெண்கள் கேரளாவில் பணியாற்றி வந்தனர். அவர்கள் விமானத்தில் சொந்த மாநிலம் திரும்ப சோனு சூட் உதவினார். இதுவரை 12,000 பேரை சொந்த ஊருக்குத் தன் செலவில் அனுப்பியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இதை நினைவுகூர்ந்து ஒடிசா தலைநகர் புவனேஸ்வரின் முக்கியச் சாலை சந்திப்பில் ஒரு குழுவினர் சோனு சூட்டின் பிரம்மாண்ட போஸ்டரை வைத்து அதை வழிபட்டனர். அந்த போஸ்டரில், கரோனா வைரஸை எதிர்த்துப் போரிடும் மன்னர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய ஒடிசா நடிகர் சப்யாச்சி மிஸ்ரா, நடிகை ராணிபண்டா ஆகியோரின் போஸ்டர்களையும் மக்கள் வழிபட்டனர். சோனுவின் உதவியால் வீட்டிற்குச் சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள், அவருடைய புகைப்படத்திற்கு பூஜை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நடிகர் சோனு சூட் கூறும்போது, "என்னை கடவுளாகப் பார்க்க வேண்டாம். உங்கள் அன்பும், வாழ்த்தும் மட்டும் போதும்" என்று தெரிவித்தார்.