தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு போன்ற மூன்று துறைகளில் பயணித்தவர் 'தியாகராஜன்'. 80-களில் இவர் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்தன. இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி அவர்களுடன் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு...
"என்னை பார்த்தவுடன் நீங்கள் வலுவான உடல்கட்டமைப்புடன் இருக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். நான் அப்படி இருக்க காரணமே பாக்ஸிங் தான். பாக்ஸிங்கில் காலையில் எழுந்து இரண்டுமணி நேரம் ஓட வேண்டும். ஸ்கிப்பிங், டயட் போன்ற கண்டிப்பான வழிமுறைகள் இருந்தன. நான் பாக்ஸிங் பயிற்சியில் இருந்த போது 'அலைகள் ஓய்வதில்லை' படம் பெரிய வெற்றிபெற்றது. அந்த வெற்றியை வைத்து என்னை ஒரு மேடையில் பாக்ஸிங் பண்ண சொல்லி போஸ்டர் ஒட்டிவிட்டார்கள். இந்த செய்தி எம்.ஜி.ஆர் அவர்களுக்கு தெரிந்துவிட்டது. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு எல்லாருக்கும் கேடயம் வழங்கி பேசிய எம்.ஜி.ஆர், " தியாகராஜன், நீங்கள் பாக்சர் என்று கேள்விப்பட்டேன். தொடர்ந்து மேடையில் பாக்ஸிங் செய்யவுள்ளதாகவும் கேள்விப்பட்டேன். அந்த மேடையில் சண்டையிடும் போது உங்களுக்கு அடிபட்டு விட்டால் உங்களை நம்பி பணம் முதலீடு செய்துள்ள நிறைய தயாரிப்பாளர்கள் பாதிப்படைவார்கள். அதனால் நீங்கள் இனிமே பாக்ஸிங் பண்ண கூடாது, இது என் அன்பு கட்டளை" என்று சொன்னார்.
அன்று முதல் பாக்ஸிங் பண்ணுவதை விட்டுவிட்டேன். அதன் பிறகு ஒரு படப்பிடிப்பின் போது எனக்கு அடிபட்டு விட்டது. நாளிதழ்களில் 'தியாகராஜனுக்கு விபத்து' என்ற தலைப்புடன் எழுதியிருந்தார்கள். பின்பு எம்.ஜி.ஆர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. முதலமைச்சர் உங்களை பார்க்க வருகிறார் என்று. நேராக வீட்டுக்கே வந்துவிட்டார். வந்து 'என்ன பாக்சிங்லயா...இல்ல சார் ஷூட்டிங்ல' என்று சொன்னேன். தொடர்ச்சியாக நேரம் கிடைக்கும் போது அவரை சந்திப்பேன். ரொம்ப அன்போடு கேட்பார், எனக்கு ஒன்னும் வேண்டாம் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்வேன். பிறகு 'பூவுக்குள் பூகம்பம்' என்ற படத்தை இயக்கினேன். ஆர்மி கதைக்களத்தை கொண்டு உருவான முதல் இந்திய திரைப்படம் அதுதான். அந்த படத்தை எம்.ஜி.ஆர் அவர்களுக்கு போட்டு காண்பித்தேன், படம் பார்த்தவுடன் ரொம்ப உற்சாகமாகி விட்டார். இந்த படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா ஒன்று செய்து அதனை நீங்கள் வெளியிடவேண்டும் என கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்துவிட்டார். நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் எம்.ஜி.ஆர் நிறைய செண்டிமெண்ட் பார்ப்பார். படத்திற்கு தலைப்பு எப்படி வைக்கவேண்டும், பத்து எழுத்தில் வைக்கவேண்டும் போன்ற விஷயங்களை என்னிடம் பகிர்ந்துள்ளார். ஒரு ஆடியோ வெளியீட்டிற்கெல்லாம் முதலமைச்சர் வருவாரா என்று பல பேர் அந்த நேரத்தில் கிண்டலடித்தனர். அவர் அந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தார். அதன் பிறகு தான் பாடல் வெளியீட்டு விழா வைக்கணும் என்ற ஃபார்முலா தொடர்ச்சியாக கடைபிடித்து வந்தனர்.
சிவாஜியுடன் இருந்த அனுபவங்களை பற்றி கூறுகையில், "நான் பார்த்து வியந்த பிரம்மாண்டமான நடிகர் சிவாஜி சார். ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோவான வாகினி ஸ்டுடியோவில் மொத்தம் பதினேழு தளம் இருக்கும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு படப்பிடிப்பு நடக்கும். அப்போது ஒரு செட்டில் காரில் இருந்து சிவாஜி சார் கையில் சிகரெட் பிடிச்சிக்கிட்டு இறங்கி ஸ்டைலாக நடந்து வந்தார். அதையெல்லாம் பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும். நாகிரெட்டி சாரை வழக்கமாக நான் சந்திப்பது உண்டு. எனக்கு ஏற்கனவே நடிப்பு வராது என்னை கூப்பிட்டு போய் அவருடன் சேர்ந்து நடிப்பதா என கூறி வர மறுத்துவிட்டேன். அவர் அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்து இந்த கதாபாத்திரம் இந்த தம்பி நடித்தால் நன்றாக இருக்கும் என சொல்லி தான் என்னை படக்குழு அணுகினார்கள். அதன் பிறகு என்னை வரசொல்லிருந்தார், அப்பவும் அவரை பார்க்கும் போது ஒரு பெரிய நடிகருடன் உக்காந்து இருக்கிறோம் என்ற உணர்வு. எனக்கு நடிப்பெல்லாம் வராது என்றேன். உடனே நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க நம்ம நடிக்கிறோம் என்று சொன்னார். பின்பு என்னுடன் இணைந்து நடிக்கும் போது நெருங்கி பழகி விட்டார். அதன் பிறகு என் மேல் அவருக்கு தனி பிரியம் உண்டு. அப்போது ஆப்ரிக்கன் நாட்டிற்கெல்லாம் அதிகம் பயணம் மேற்கொள்வேன். பிஸ்னஸ் டீலிங்கிற்காக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயணிப்பேன். அப்போது ஆப்ரிக்கன் ஸ்டைலில் பெரிய கைசெயின், கழுத்தில் பெரிய செயின் அணிந்திருப்பேன். என்னை பார்த்தாலே 'டேய்...நகைக்கட இங்க வாடா...' என்று தான் அழைப்பார். அவர் அழைத்ததினாலோ என்னவோ தெரிவில்லை இங்க ஒரு நகைக்கடை ஆரம்பித்து விட்டேன்" என்று கூறினார்.