தெலுங்கு, கன்னட நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சிக்காகோவில் வசிக்கும் தெலுங்கு பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை போலீசார் சமீபத்தில் விபசார வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அமெரிக்கா செல்லும் தென் இந்திய நடிகைகளை கடும் சோதனைகளுக்கு பிறகே தற்போது அமெரிக்க போலீசார் தங்களது நாட்டிற்குள் அனுமதித்து வருகிறார்கள். இதற்கிடையே நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நடித்த நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவும் தற்போது இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளார். தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாடா கனடாவின் வான்கூவர் நகரில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்க போலீசார் இதுகுறித்து விசாரணையை வெகு நேரம் நடத்தியுள்ளனர். இதைதொடர்ந்து நடிகை மெஹ்ரீன் பிர்சாடா தற்போது இதுகுறித்து பேசியபோது....
"நான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருப்பதால் எனக்கு நடந்த விபச்சார பிரச்னை குறித்த விஷயம் பற்றி தெரியாது. நான் ஒரு நடிகை, அதுவும் தெலுங்கு நடிகை என்றதுமே என்னிடம் போலீசார் 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள். எனக்கு அது அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது. நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாக அவர்கள் மேலும் கூறினார்கள். பின்னர் அவர்கள் என்னிடம் மன்னிப்பும் கேட்டனர்" என்றார். ஏற்கனவே இப்பிரச்சனை குறித்து நடிகை ஸ்ரீரெட்டி பேசும்போது...'விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகைகளின் பட்டியலை வெளியிடுவேன்' என்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மெஹ்ரீன் பிர்சாடா மீது நடத்திய விசாரணையால் தெலுங்கு படவுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.