விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பொங்கல் பண்டிகைக்குத் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது மாஸ்டர் திரைப்படம். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அபார நடிப்பு, அனிருத்தின் இசை, லோகேஷ் கனகராஜின் இயக்கம் என இப்படத்தின் பல அம்சங்களும் பாராட்டப்பட்டு வருகின்றன. இந்தச்சூழலில், 'மாஸ்டர்' திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரெகே கூறுகையில், "மாஸ்டர்’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்கியதில் எங்களுக்குப் பெருமை. தமிழில் இந்தப் படம் உருவாக்கிய மாயாஜாலத்தை இந்தி ரசிகர்களை ஈர்க்குமாறு நாங்கள் மீண்டும் உருவாக்குவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியிருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார். இந்தி ரீமேக்கை எண்டெமால் சைன் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து 7 ஸ்கிரீன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இந்த இந்தி ரீமேக்கில் பணிபுரிய இருப்பவர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகலாம் எனக் கருதப்படும் நிலையில், விஜய்யின் ரசிகர்கள் இந்த தகவலைக் கொண்டாடிவருகின்றனர்.