உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வருவதால் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பலரும் இரவு, பகல் பாராது கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரங்கை அறிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது ஊரடங்கை வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலமும் கரோனா விழிப்புணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து கரோனா குறித்த விழிப்புணர்வு கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
“கரோனா” என்று உச்சரித்தால்
உதடுகள் ஒட்டுவதில்லை...
நான்
மனிதர்களை ஒட்டாமல் இருக்க
நீங்கள் ஒருவரை ஒருவர்
ஒட்டாமல் இருங்கள் என்று
உணர்த்துகிறது கரோனா...
தள்ளி நிற்போம்
தற்காலிகமாய்...
கொள்ளி வைப்போம்
கரோனாவுக்கு...
-மாரிமுத்து
(நடிகர்-இயக்குநர்)'' என எழுதியுள்ளார்.