
இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது பைசன் என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடைக்ஷன் பணிகளில் கவனம் செலுத்து வருகிறார். இதனிடையே சேலத்தில் உள்ள ஒரு அரசு கலை கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மாணவ மாணவிகளிடையே தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “என் தந்தை என்னை எங்கேயும் கூட்டிப் போனதில்லை. ஆனால் எல்லா பக்கமும் என்னை அனுப்பி வைத்தார். அவர் ஒரு குரலாக இருக்கிறார். அந்த குரல் உருவாக்கின ஆள்தான் மாரி செல்வராஜ். என்னுடைய குரல் என் பிள்ளைகளை என்னவாக மாற்றும் என்பது எனக்கு தெரியாது. அவர்கள் வேறொரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நான் பேசுவதை அவர்கள் பார்க்கிறார்கள். ஏன் அப்படி பேசுகிறார் என யோசிக்கிறார்கள். அவர்களுடைய குரல் வேறு ஒன்றாக மாறும்.
ஒடுக்கப்பட்ட குரலை பேசும் ஒரு நபராகச் சொல்கிறேன், நான் கருத்தியல் அடிப்படையில் உருவானவன் கிடையாது. முழுக்க முழுக்க வாழ்வின் அடிப்படையில் உருவானவன். வாழ்க்கையில் எனக்கு நடந்த நியாயங்களையும் அநியாயங்களையும் பிரித்து பார்த்து இந்த சமூகத்தை புரிந்து கொண்டு களமாட வந்தவன் தான் மாரி செல்வராஜ்” என்றார்.