மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும், அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், இப்படத்தின் கதை தான் எழுதிய ‘வாழையடி...’ என்ற சிறுகதையின் தொகுப்பில் இருந்து உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “10 வருடத்திற்கு முன்பு இந்த வாழை படத்தின் கதையை நான் சிறுகதையாக எழுதினேன். அந்த கதைக்கு பெயர் ‘வாழையடி _,_...’ என்று இருக்கும். சிறுவர்கள் வாழையடி வாழையாக கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பதற்காக அப்படி பெயர் வைத்தேன். இந்த சிறுகதையில் வரக்கூடிய அத்தனை விஷயங்களும் வாழை படத்தில் இருக்கிறது. சினிமாவுக்காக சில விஷயங்களை அவர்கள் சேர்த்துள்ளார்கள். மற்றபடி அது என்னுடைய திரைக்கதைதான்.
என்னுடன் பிறந்த தம்பியும், என்னுடைய தாய் மாமனும் சம்பந்தம் பண்ணியுள்ளது மாரி செல்வராஜ் ஊருக்கு அருகிலுள்ள பொன்னன்குறிச்சியில் தான். அங்கு வாழைதான் பிரதான விவசாயம். நான் பள்ளி பருவத்தின்போது விடுமுறை தினங்களுக்கு அங்கு செல்வேன். அப்போது அங்கு நடக்கும் வாழை தொழில் தொடர்பான விஷயங்களை கேட்டும் பார்த்தும் என்னுடைய சிறுகதையை எழுதினேன். வாழை படம் தொடர்பாக மாரி செல்வராஜ் என்னிடம் அணுகவில்லை. இப்படத்தில் என்னுடைய கதையும் இருக்கிறது. அதோடு அவருடைய சொந்த அனுபவமும் இருக்கிறது. அதை இல்லையென்று சொல்லமுடியாது. அவரே வாழை சுமந்திருக்கிறேன் என்று பேட்டி கொடுக்கிறார். ஆனால் அந்த சிறுவர்களின் வலியை ஒரு படைப்பாக உருவாக்கியவன் நான் தான். அதற்கு அவர் வேறு ஒரு ஊடகத்தின் மூலமாக உயிர் கொடுத்துள்ளார்” என்றார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாரி செல்வராஜ் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில்,“வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் பற்றி எழுத்தாளர் சோ தர்மன் ‘வாழையடி’ என்கிற பெயரில் எழுதிய சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். அவருக்கு நன்றி” என்று குறிப்பிட்டதோடு அந்த சிறுகதையின் லிங்கை பகிர்ந்து அவசியம் இந்த கதையை அனைவரும் வாசியுங்கள் என்று கூறியுள்ளார்.