கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில், பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதை சரி செய்ய தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் பலர் தூத்துக்குடியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் இயக்குநர் மாரி செல்வராஜும் களத்தில் இருந்து உதவி செய்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் மீட்பு பணிகள் குறித்து தொடர்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இதனிடையே மாரி செல்வராஜ் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலான நிலையில், அது விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது. இந்த நிலையில் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது” என பதிவிட்டுள்ளார்.