இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல் ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
மேலும், இந்தப் படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றைச் சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இந்நிலையில் முத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்து ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். அதில், “தம்பி விஜய்சேதுபதிக்கு நடிகர் மன்சூர் அலிகானின் பனிவான வணக்கங்கள். மிகவும் மனவேதனையுடன்தான் உங்களிடம் பேசுகிறேன். பொதுவாக திரைப்படத் துறை என்பது மொழி, இனம் என்பதைக் கடந்ததுதான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், இந்த நூற்றாண்டில் குறிப்பாக கடந்த 20 வருடங்களில் தமிழ்நாட்டில் எவ்வளவு நயவஞ்சகச் செயல்கள் நடைபெறுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும்.
முத்தையா முரளிதன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறீர்கள். 2009 ஈழப் படுகொலையை வரவேற்று உலகரங்கில் பேசிய ஒரு ‘ஆண்டி தமிழ்’ - தமிழினத் துரோகி அவர். திருச்சி அருகிலிருந்து அவருடைய மூதாதையர்கள் அங்கு சென்றிருக்கலாம், அதனால், சொந்த நாட்டில் வாழ்ந்து வந்த தமிழினத்திற்குச் சொந்தமான பூமிதான் ஈழம். முதலில் நீங்கள் வரலாறு தெரிந்துக்கொள்ள வேண்டும். மாறி மாறி ஆளப்பட்டதுதான் ஈழம், அது பல நாடுகளின் உதவியால் நயவஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டது. சரித்திரத்தை அறியாமல், தெரியாமல் இருக்கக்கூடாது.
ஹீரோவாக நடிக்கும் அளவிற்கான மனிதரல்ல அவர். தமிழ்நாட்டில் அவரை ஹீரோவாக காட்ட நினைக்காதீர்கள். தமிழ்நாட்டில் எந்த திரையரங்கிலும் ஓடவிட மாட்டேன். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தற்போது இல்லை, இருந்திருந்தால் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். 50 கோடி அல்லது 100 கோடி வாங்கி எந்தப் படத்திலாவது நடியுங்கள். தமிழ் நாட்டு வீரர்களான ஸ்ரீகாந்த் வேடத்தில் நடியுங்கள், சடகோபன் ரமேஷ் வேடத்தில் நடியுங்கள். கிரிக்கெட் வீரராக தமிழர் யாரும் இல்லையா? ஏன் தன்ராஜ் பிள்ளை ஹாக்கி வீரர் இல்லையா? நாங்கள் கடும் கோபத்தில் இருக்கிறோம். ஒட்டுமொத்த தமிழினத்திற்கு எதிரியாகி விடாதீர்கள்.
நீங்கள் தமிழ்நாட்டு மக்களின் செல்லப்பிள்ளையாக இருக்க வேண்டும். நடிகராக உங்களை வரவேற்கிறேன். ராஜபக்சேவின் கைக்கூலியாக இருக்கும் அவருடைய படத்தில் நடித்து, இன்னும் நியாயத்திற்காகப் போராடும் தமிழினத்திற்கு துரோகம் செய்ய நினைக்காதீர்கள். தயவுசெய்து அந்தப் படத்தை தூக்கிப் போடுங்கள். அதைவிட ஆயிரம் மடங்கு உங்களால் சம்பாதிக்க முடியும். இந்தத் தவறை நீங்கள் செய்யக்கூடாது.
நடித்துப் பாருங்கள், எந்த ஒரு காலத்திலும் எங்கள் பிணத்தின் மீதுதான் ரிலீஸ் செய்ய வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார்.