மன்சூர் அலிகான், சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வருகிற திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.