இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா 1999 ஆம் ஆண்டு வெளியான 'தாஜ்மஹால்' படம் மூலம் நடிகராக திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படத்தை பாரதிராஜாவே இயக்கியிருந்தார். தொடர்ந்து அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனிடைய சமுத்திரம், கடல் பூக்கள், மகா நடிகன் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக கார்த்தியின் 'விருமன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், மனோஜ் பாரதிராஜா தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் இசையில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக மனோஜ் பாரதிராஜா பணிபுரிந்துள்ளார். மேலும் 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். தான் நடிகராக அறிமுகமான தாஜ்மஹால் படத்தை தனது அப்பா பாரதிராஜா இயக்கினார். அதுபோல தான் இயக்கும் முதல் படத்தில் தனது அப்பா பாரதிராஜாவை நடிக்க வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.
இயக்குநர் பாரதிராஜா, அருள்நிதியுடன் இணைந்து ‘திருவின் குரல்’ மற்றும் தங்கர் பச்சான் இயக்கும் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'தாய்மெய்' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.